திருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்!

 திருச்சி: திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயங்க தொடங்கின. திருச்சியில் இருந்து விருத்தாசலம் வழியாக ஏற்கனவே மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெயின் லைனை பொறுத்தவரை திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டும் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்குவதற்கான வசதி உள்ளது. தஞ்சாவூரிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் பாதையை மின்மயம் ஆக்குவதற்காக ரூ.300 கோடியில் திட்டமிடப்பட்டது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக விழுப்புரம் ஜங்ஷன் வரையிலான இந்த திட்டத்தை இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ஆர்.வி.என்.எல். நிறுவனம் செய்து முடித்து உள்ளது. இதன் கடைசி பகுதியான மயிலாடுதுறை முதல் தஞ்சாவூர் வரையிலான 68 கி.மீ.நீள ரயில் பாதையை மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபைகுமார் ராய் தலைமையிலான குழுவினர் பெங்களூருவில் இருந்து வந்து சிறப்பு ரெயிலில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஆர்.வி.என்.எல். அதிகாரிகள் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். 
தண்டவாளத்தின் உறுதித் தன்மை மற்றும் வேகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் மூலம் ரயில்களை இயக்கலாம் என சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்துதற்போதுதஞ்சாவூரிலிருந்து விழுப்புரம் வரை மின்சார ரயில் என்ஜின்கள் மூலம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. விழுப்புரத்திலிருந்து ஏற்கனவே சென்னை வரை மின்சார என்ஜின்கள் மூலமாகவே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே சென்னையிலிருந்து திருச்சி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கான வழி பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் திருச்சி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மைசூர்-மயிலாடுதுறை இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கடந்த 14-ந் தேதியிலிருந்து மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/trains-with-electric-locomotives-started-running-on-the-main-line-from-trichy-to-thanjavur-403300.html

Post a Comment

Previous Post Next Post