திருச்சியில் எடை குறைவு மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

 திருச்சி:


திருச்சி காந்தி மார்க்கெட், பெரிய கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பஸ்நிலையம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் தள்ளு வண்டிகள் மூலம் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, சீத்தாப்பழம் உள்ளிட்ட பழ வகைகளையும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும் விற்பனை செய்து வருகிறார்கள்.

திருச்சியில் எடை குறைவு மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
தள்ளுவண்டியில் வாங்கப்பட்ட சீதாப்பழங்களின் எடை மற்றொரு கடையில் எடை குறைவாக காட்டுகிறது


பொதுவாக பெரிய கடைகளில் பழங்கள் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும், அவர்கள் நிர்ணயித்த விலையை குறைக்க மாட்டார்கள், ஆதலால் சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருள் வாங்கலாம் என்ற ஒரு கருத்து பொதுமக்கள் மத்தியில் உண்டு. இதன் காரணமாகவும், சாலையோர வியாபாரிகள் தங்களது பொருட்களை கூவிக்கூவி விற்பனை செய்வதாலும் பொது மக்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்கள்.


இந்த சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்யும் பழ வகைகள் மற்றும் பொருட்களின் எடை சரியாக இருப்பதில்லை அளவு குறைகிறது என்ற புகார் வருகிறது. இத்தனைக்கும் அவர்கள் நாம் வாங்கும் பழம் உள்ளிட்ட பொருட்களை அவர்களது தராசில் நம் கண் முன்னே தான் எடை போட்டு தருகிறார்கள். ஆனால் அந்த பொருளை வெளியில் நமக்கு நம்பிக்கையான ஒரு கடையில் கொடுத்து எடை போட சொன்னால் குறைந்தபட்சம் 100 முதல் 200 கிராம் வரை குறைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் இதுபோன்ற சாலையோர வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும் அப்பாவி பொது மக்கள் அன்றாடம் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி அவர்களிடம் யாராவது ஒருவர் கேட்டால் உங்கள் கண்முன்தானே எடை போட்டேன். நீங்கள் தான் பார்த்தீர்களே இப்போது இப்படி வந்து கேட்கிறீர்களே என அவர்கள் எதிர்வாதம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் இதுபோன்ற வாக்குவாதம் முற்றி வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விடுவதும் உண்டு. இதற்கு பயந்து அப்பாவி பொதுமக்கள் நமக்கு ஏன் வம்பு என புகார் கூட செய்யாமல் சென்று விடுகிறார்கள். உதாரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மயிலம் சந்தை சாலையில் பெண் ஒருவர் ஒரு தள்ளுவண்டி வியாபாரியிடம் ஒரு கிலோ சீத்தாப்பழம் வாங்கியுள்ளார்.

அதனை வாங்கும்போது அந்த சாலையோர வியாபாரியின் தராசில் 1,025 கிராம் இருப்பதாகக் காட்டியது. ஆனால் அதை இன்னொரு காய்கறி கடையில் கொண்டு வந்து எடை போட்டபோது 865 கிராம்தான் இருந்தது. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பார்கள். அந்தப் பழமொழி இதற்கு முற்றிலும் பொருந்தும்.

சாலையோர வியாபாரிகளிடம் வாங்கும் பொருட்கள் எடை குறைத்து மோசடி செய்யப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். விலை குறைவாக இருக்குமே எனக்கருதி பழங்கள் வாங்கினால் எடை குறைவு மோசடி நடப்பது தொடர்கதையாகி வருகிறது. வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்வதற்கு பயன்படுத்தும் தராசு, எடை கற்கள் ஆகியவற்றை தொழிலாளர் துறையின் எடை கற்கள் மற்றும் முத்திரை பிரிவு அலுவலகத்தில் காண்பித்து சரியான கருவி என சான்றிதழ் பெற்ற பின்னரே வியாபாரம் செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.

ஆனால் இவர்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் தராசுகள் முத்திரை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? அல்லது தராசில் ஏதாவது மாய வேலைகள் செய்து எடையை குறைப்பதற்கான தில்லுமுல்லுகளில் ஈடுபடுகிறார்களா என தெரியவில்லை.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது ‘எடை குறைவு என்பது சிறிய கடையில் நடந்தாலும் ’ பெரிய கடையில் நடந்தாலும் அல்லது சாலையோரத்தில் நடந்தாலும் அது ஒரு வகையான மோசடி தான். அது சிறு வியாபாரி செய்தாலும் தவறுதான் பெரிய வியாபாரி செய்தாலும் தவறுதான். இதுபோன்ற தவறுகளை செய்யும் வியாபாரிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு எங்கள் துறைக்கு அதிகாரம் இல்லை என்றாலும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. எடை மோசடி செய்யும் வியாபாரிக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்ல அவர்களது எடை கற்கள் மற்றும் தராசுகள் ஆகியவற்றை உடனடியாக பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது.

எங்கள் துறை சார்பில் திடீரென ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதும் உண்டு. அதேநேரத்தில் பொதுமக்களும் தாங்கள் வாங்கும் பொருளில் அளவு குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மோசடி பற்றி தொழிலாளர் துறையின் முத்திரை பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். ஆதாரத்துடன் புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுப்போம். எடை அளவை குறைப்பதற்காக தராசுகளில் தில்லுமுல்லு செய்தாலோ அல்லது முத்திரை இடாமல் வைத்திருந்தாலோ சட்டப்படி அது தவறுதான் ஆதாரத்துடன் புகார் செய்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

news source courtesy : malaimalar

Post a Comment

Previous Post Next Post