Erumbeeswarar Temple in Thiruverumbur, Trichy







 திருச்சிற்றம்பலம்

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:  (73) எறும்பீஸ்வரர் கோயில்:
மூலவர்: எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர் அம்மன்: நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 4 தீர்த்தங்கள் 
புராண பெயர்: திருவெறும்பியூர்

 ஊர்: திருவெறும்பூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இறைவன் அருள்கிறார்.
லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது, எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர்.


லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. வலப்பகுதி சிவன் அம்சம் என்றும், இடப்பகுதி அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர்.

சிவமும் சக்தியும் ஒன்று என்பதை இந்த "சிவசக்தி லிங்கம்" உணர்த்துகிறது.

அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கும் அன்னைக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது. சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில், ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர்.

கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும், சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.

கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில், சிவனும் மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும், யார் பெரியவர் என போட்டி வந்தபோது, வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருப்பதாக ஐதீகம். தாரகாசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

பிரம்மாவின் அறிவுரைப்படி, இத்தலத்தில் இறைவனை மலர் வைத்து பூஜை செய்ய தேவர்கள் வந்தனர்.



அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர். சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் மேலே செல்ல முடியவில்லை.






தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார். தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர்.

அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். "எறும்பீஸ்வரர்" என்ற பெயரும் பெற்றார்.

இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.

இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும் , இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. 
தேவாரப் பாடல்:



நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே 

Content source : 
@ShanmuSundarS


Post a Comment

Previous Post Next Post