ஆதரவற்றோர்களின் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு


திருச்சி, 
ஆதரவற்றோர்களின் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றோருக்கான வார்டு

திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் ஆதரவற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 20 படுக்கைகளுடன் புதிதாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. 
இந்த வார்டை மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த வார்டில் ஆதரவற்றோருக்கு தொண்டுள்ளம் உள்ளவர்கள் உதவுவதற்காக அன்புசுவர் போன்ற அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் உடைகள், போர்வை, துண்டு, தட்டு, டம்ளர் உள்ளிட்டவைகளை அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பயன்பாட்டிற்காக வைக்கலாம்.

முறையான சிகிச்சை

இது குறித்து டீன் வனிதா கூறுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக சிறப்பு வார்டுகளை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உறவினர்களோ, குடும்பத்தினரோ இருந்தால் முறையான சிகிச்சை அளித்து குணம் அடைந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அப்படி யாரும் இல்லாதவர்களை சிகிச்சைக்கு பிறகு, காவல்துறையினரிடம் தெரிவித்து அங்கீகாரம் பெற்ற காப்பகங்களுக்கு அனுப்பி விடுவோம் என்றார்.Post a Comment

Previous Post Next Post