திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன பூங்கா

திருச்சி:

திருச்சி மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பொலிவுறு நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் செட்டிப்பாலத்தில் இருந்து உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் ஆறுகண் பாலம் வரை நவீன பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலின் தோற்றத்தை படத்தில் காணலாம்.


இதில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் திறந்த வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. `ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உய்யகொண்டான் கால்வாய் கரையில் 3 நவீன பூங்காக்கள் அமைவதோடு, கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன.

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஊஞ்சல், சறுக்கு, சீ-சா, குதிரை விளையாட்டு என பல விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் திறந்தவெளி அரங்கு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல், பெரியவர்களுக்கான நடைபாதை பயிற்சிக்கான தளம் அமைத்தல், மின் விளக்கு வசதி ஆகியவை இடம் பெறுகின்றன.

தற்போது பூங்காவில் பச்சைபசேல் என செடிகளுடன், புல்தரைகள் அமைக்கப்பட்டு பூங்காவை புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பூங்காவை சுற்றியுள்ள சுவர்களில் கண்ணை கவரும் வகையில் வண்ண, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட உள்ளது. மேலும் நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பணிகள் முடிந்து பூங்கா எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Post a Comment

أحدث أقدم