பழைய திருச்சிராப்பள்ளியும் தீபாவளியும்


பிளஸ் டூ படிக்கும்போது பள்ளியில் இன்டெராக்ட் க்ளப் என்று ஒன்று இருந்தது..தீபாவளி காலங்களில் சுமார் ஒரு மாதம் முன்னாடியே அதில் இருந்த எங்களை போன்றவர்களையெல்லாம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அனுப்பிவிடுவார்கள்.திருச்சி என் எஸ் பி ரோட்டில் சாரதாஸ் முன்னால் தான் அத்தனை கூட்டமும் நிரம்பி வழியும். மலைக்கோட்டை முதல் மெயின்கார்டு கேட் வரை ஊர்ந்து தான் செல்லவேண்டும்..வெள்ளை சட்டை ,வெள்ளை பாண்ட் யூனிபாரம் போட்டுகொண்டு தோள் பகுதி அருகே சிவப்பு கலரில் ஒரு துணி பேட்ஜ் குத்திக்கொண்டு இரவு ஒன்பதரை மணி வரை கூட்டத்தை நெறிப்படுத்த வேண்டும்..ஒரு டீயும் ஒரு சமோசாவும் கொடுப்பார்கள்.


பள்ளியிலிருந்து வெளியேறும்போது காண்டக்ட் சர்டிபிகேட்டில் ' லீடர்ஷிப் தகுதி நிறைந்த மாணவன்" என்று நற்சான்றிதழ் கொடுப்பார்கள். சிங்காரத்தோப்பு குறுகிய சந்து தான். தீபாவளி சமயம் அதிலிருந்து பெரியகடைவீதி தாண்டி என் எஸ் பி ரோடு வருவதற்கு ஊர்ந்து தான் வரவேண்டும்.அவ்வளவு ஜன சமுத்திரமும் அங்கு தான். வரதராஜு சில்க்ஸ், தைலா சில்க்ஸ், ஆனந்தாஸ், சாரதாஸ், கீதாஸ் என்று ஜவுளிக்கடல் மயம் தான்.. சம்பிரதாயமாக ஒன்பதுக்கு அஞ்சு வேஷ்டி வாங்குபவர்கள் பி ஆர் நாராயணஸ்வாமி ஐயர் கடையில் ஜவுளி எடுப்பது வழக்கம். "ஆர் எஸ் கிருஷ்ணா தென்னமரக்கொடி எண்ணெய் இங்கு கிடைக்கும்" போர்டுகளை தாண்டி வந்தால் சாரதாஸில் மலிவு விலையில் ஷர்ட் பிட்கள் கிடைக்கும் என்பதாலும் நல்ல கூட்டம் இருக்கும். வாசலில் பொம்மைகள் வைப்பதோடு ஷர்ட், பாண்ட் பிட்களை வாசலில் சேர்த்து வைத்து கண்ணாடிக்கூண்டிலேயே பார்க்க வைத்து சுண்டி இழுப்பது அவர்களது சாமர்த்தியம். 


டவுன் ஹால் திருச்சியில் சிறிய இடம் தான். என் எஸ் பி ரோட்டிலிருந்து ஒரு மூத்திர சந்து வழியாக டவுன் ஹாலுக்கு ஒரு குறுக்கு வழி உண்டு. பழைய புத்தகக்கடைகளின் சொர்க்கபுரி டவுன்ஹால். பிரிஜ்லால் சுப்பிரமணியம் எழுதிய ஹீட் அண்ட் தெர்மோ டைனமிக்ஸ், பிரதாப முதலியார் சரித்திரம், சிட்டுக்குருவி லேகியம் செய்வது எப்படி, சரோஜாதேவி என்று எல்லா ரகங்களிலும் புத்தகங்களை அங்கு பேரம் பேசி வாங்கிவிடலாம்."ஆப் சேஸா கோயி மேரி ஜிந்தகி மே ஆயே" என்று குர்பானி ரக ஹிந்தி பாடல்களை அலற விட்டு வட இந்தியர்கள் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இனாம் என்கின்ற ரீதியில் ஒரு க்ளாஸ் டீ குடித்துக்கொண்டே ரெடிமேட் துணிகளை விற்று கொண்டிருப்பார்கள்.

என் சி சி சீருடைகளில் கஞ்சி போட்டு ஒரு வாடை வருமே அதே போல வாடை அந்த புது துணிகளிலும் வருவதுண்டு. தெப்பக்குளம் சிந்தாமணி ஸ்டாண்டார்ட் ஃவொர்க்ஸில் தான் சிங்கம் மார்க், குயில் மார்க் என்று பட்டாசுக்கு கூட்டம் நள்ளிரவு வரை அலைமோதும்.. தீபாவளி துணி எடுக்க வந்த குடும்பங்கள் தவறாமல் வசந்த பவனில் "சோலே பட்டுரா" என்று பெரிய பூரி வாங்கி சாப்பிடுவதோடு ஒரு ஸ்வீட் லசியோ, மசாலா பாலோ குடிக்காமல் செல்லமாட்டார்கள்.. இதெல்லாம் அப்பொழுது மக்களிடையே அறிமுகமான காலகட்டங்கள். சிந்தாமணி வாசலில் உள்ள பழச்சாறு கடையில் இன்றும் இஞ்சி எலுமிச்சை போட்ட கரும்புச்சாறுக்கு நல்ல டிமாண்ட். 'இங்கு வான்கோழி பிரியாணி கிடைக்கும்' போன்ற போர்டுகள் பாலக்கரை பகுதியில் காணப்படும். ரஜினியின் "தங்கமகன்" என்றால் மாரிஸ் 70 எம் எம்மிலோ கமலின் "தூங்காதே தம்பி தூங்காதே" என்றால் காவேரியிலோ ரிலீஸ் செய்யப்படும். கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி போக எப்படியும் பிளாக்கில் டிக்கட் கிடைக்க வழி செய்திருப்பார்கள். புது ட்ரெஸ்ஸை

ஒரு மாதத்திற்கு எங்கு வெளியே போனாலும் அதை தான் போட்டுக்கொண்டு போகவேண்டும் என்பது எழுதாத சட்டம்.புது துணியை இரவு போட்டு கொண்டு படுத்து விட்டால் திருடன் வருவான் என்று பெரியவர்கள் பயமுறுத்துவார்கள். திருடர்கள் கூட எப்பவாவது தான் வந்தார்களோ என்னவோ? எங்களை போன்ற இளைஞர்கள் மத்தியில் தீபாவளியன்று சீக்கிங்ஸ் ஐஸ்க்ரீம் பார்லரில் ஒரு டபுள் டெக்கர் ஐஸ்க்ரீமும் ப்ரெஷ் லைம் ஜூசும் குடிப்பதில் ஒரு கௌரவம் அடங்கியிருந்தது..

ஜங்க்ஷனில் இருப்பவர்கள் மயில் மார்க் மிட்டாய் கடைகளில் இனிப்பு வாங்கினாலும் ஸ்ரீரங்கத்துக்காரர்கள் பலரும் வீட்டில் செய்து கொண்டார்கள், சிலர் செத்தகட்டையிடம் முன்பதிவு செய்து தருவித்து கொள்வார்கள். சேட்டு வீடுகளில் ஒரு லட்சம் வாலா, பத்து லட்சம் வாலா என்று பட்டாசை வெடித்து காதை டமாரமாக்கி ஊரு முழுக்க குப்பையாக்கி கொண்டாடியிருப்பார்கள்.

அடுத்து ஒரு வாரத்தில் குப்பைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தப்படுத்தி முனிசிபாலிட்டி துப்புரவு தொழிலாளர்கள், 'தம்பி, அப்பா இருக்காங்களா?' என்று இரண்டு ரூபாய் தீபாவளி இனாமிற்கு தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள் 

மலரும் நினைவுகள்


போஸ் செல்வ க்குமார்

Post a Comment

Previous Post Next Post